கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் விடிய, விடிய தர்ணா
‘மூடா’ முறைகேடு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் விடிய, விடிய தர்ணா நடத்தினர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வால்மீகி வளர்ச்சி வாரிய நிதி முறைகேடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைத்தொடா்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ள விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபை விவகாரத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் பேசுகையில், "அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிக்க மட்டுமே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடியும். அதுவும், முக்கியமான பிரச்சினை என்றால் முதல் நாளிலேயே இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. மேலும், மூடா முறைகேடு குறித்து அரசு கடந்த 14-ந் தேதி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. நீதி விசாரணை நடைபெறும் விஷயம் குறித்து சபையில் விவாதிக்க முடியாது என்று சபை விதி சொல்கிறது. நீதி விசாரணைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன" என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார், "சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அவசரமாக நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த சபையில் அதுகுறித்து விவாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் நீதி விசாரணையை அமைத்துள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது முக்கியமான பிரச்சினை. இதுகுறித்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.
14 வீட்டுமனைகள்
அதைத்தொடர்ந்து மீண்டும் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத், "முதல்-மந்திரியின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முக்கியமான பிரச்சினை. இது அவசர பிரச்சினை தான். அதனால் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும்" என்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சபை அமைதி நிலைக்கு திரும்பிய பிறகு பேசிய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட், "வீட்டு மனைகளை கொடுத்தது யார். பா.ஜனதா ஆட்சியில் தானே வழங்கப்பட்டது. அப்படி என்றால் பணம் வாங்கியது யார், நீங்கள் தானே" என்றார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள், அந்த முறைகேடு பற்றி எங்களுக்கு தெரியாது என்றார். அதைத்தொடர்ந்து சுரேஷ்குமார் மீண்டும் குறுக்கிட்டு, "இது ஒரு மோசமான முறைகேடு. இதுகுறித்து சபையில் விவாதம் நடைபெற வேண்டும். இதற்கு முதல்-மந்திரி பதிலளிக்கட்டும். அவர் தனது தரப்பு அம்சங்களை எடுத்துக் கூறலாம். ஏனெனில் நாடு நகரம் மட்டுமின்றி மாநிலம், தேசிய அளவில் பேசு பொருளாக இது மாறியுள்ளது" என்றார்.
மீண்டும் பேசிய மந்திரி எச்.கே.பட்டீல், "மூடா விவகாரம் குறித்து நீதி விசாரணை நடைபெறுவதால், ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது, இதை நிராகரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் யு.டி.காதர், "வால்மீகி வளர்ச்சி வாரிய முறைகேடு சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதனால் அதுபற்றி நான் விவாதிக்க அனுமதி அளித்தேன். இன்னும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி அளித்தேன். இது பழைய விவகாரம். அதனால் மூடா விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க முடியாது. பா.ஜனதா கொண்டு வந்துள்ள இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்கிறேன். வேறு எந்த வடிவத்திலும் இதுகுறித்து விவாதிக்க அனுமதி அளிக்க முடியாது" என்று அறிவித்தார்.
இதனால் பா.ஜனதா உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மதிய உணவு இடைவெளிக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இடைவேளைக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடியது.அப்போது, மூடா முறைகேடு குறித்து விவாதிக்கும் விஷயத்தில் சபாநாயகர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் கோரினர்.இதற்கு முதல்-மந்திரி சித்தராமையா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அவர் பேசுகையில், "மூடா விவகாரம் குறித்து பா.ஜனதா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள். முடிவை அறிவித்த பிறகு மீண்டும் அதுபற்றி பேசுவதை ஏற்க முடியாது" என்றார். இதையடுத்து சபாநாயகர் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் நிகழ்வை எடுத்துக் கொண்டார்.
இதை கண்டித்து பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக் கோரி கோஷங்களை எழுப்பினர். இந்த அமளிக்கு இடையே சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு சபையை சபாநாயகர் யு.டி.காதர் ஒத்திவைத்தார்.
அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், "மூடா முறைகேட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து விவாதிக்க நாங்கள் அனுமதி கோரினோம். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. சபாநாயகர் பீடத்தை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதை கண்டித்து நாங்கள் சட்டசபை, மேல்-சபையில் இன்று (அதாவது நேற்று) பகல்-இரவாக தர்ணா நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்" என்றார்.
இதையடுத்து பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினா்கள் நேற்று இரவு சட்டசபை அரங்கிலேயே படுத்து தூங்கினர். அவர்களுக்கு அங்கேயே உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மேல்-சபையிலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர்கள் தூங்க வசதியாக படுக்கை, தலையணை, போர்வைகள் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட்டன. இரவிலும் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக, சட்டசபை கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாக இன்றே (வியாழக்கிழமை) நிறைவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சித்தராமையா பதவி விலக கோரி விரைவில் பா.ஜனதாவினர் பெங்களூருவில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த மூடா முறைகேடு விவகாரம் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.