மராட்டியத்தில் 9 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் - மும்பை ஐகோர்ட் கண்டனம்


மராட்டியத்தில் 9 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் - மும்பை ஐகோர்ட் கண்டனம்
x

வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

மும்பை,

மும்பை மேற்கு புறநகா் பகுதியில் 9 வயது சிறுவன் பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறான். சிறுவன் கடந்த மார்ச் மாதம் அவன் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சைக்கிள் மோதி நடிகை ஒருவரின் தாய் காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் 9 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சிறுவன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி அவனது பெற்றோர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, எஸ்.எம். மோதக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. மாநில அரசுக்கு அபராதம் அப்போது நீதிபதிகள் போலீசார் 9 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். போலீசார் புத்தியை பயன்படுத்தாமல் வழக்குப்பதிவு செய்ததாக கூறினர்.

இதையடுத்து சிறுவன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் இந்த தொகையை தவறு செய்த போலீசாரிடம் இருந்து வசூல் செய்து சிறுவனின் தாயிடம் இழப்பீடாக வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story