கழுத்தை நெரித்து பெண் படுகொலை; நாடகமாடிய கணவர் கைது
ஹாசனில் கழுத்தை நெரித்து பெண்ணை படுகொலை செய்துவிட்டு நாடகமாடிய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாசன்:
ஹாசனில் கழுத்தை நெரித்து பெண்ணை படுகொலை செய்துவிட்டு நாடகமாடிய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கொலை
ஹாசன் நகர் தண்ணீருஹல்லா அருகே குட்டேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆதி (வயது 26). இவரது மனைவி ஸ்ரீ(23). இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆதி, தனது மனைவி ஸ்ரீயை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதி, ஸ்ரீயை கழுத்தை நெரித்துள்ளார். இதில் ஸ்ரீ, மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆதி அதிர்ச்சி அடைந்தார்.
கணவர் கைது
இதையடுத்து அவர், ஸ்ரீயின் உறவினர்களை தொடர்புகொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஆதியின் வீட்டுக்கு விரைந்து வந்து ஸ்ரீயின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே ஹாசன் டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஸ்ரீயின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், ஆதியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான், ஸ்ரீயை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் ஆதியை கைது செய்தனர். இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.