கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலியின் அண்ணன் உள்பட 2 பேர் கைது
சீனிவாசப்புரா தாலுகாவில் நடந்த கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலியின் அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோலார் தங்கவயல்:
சீனிவாசப்புரா தாலுகாவில் நடந்த கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலியின் அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கல்லூரி மாணவர்
கோலார் மாவட்டம் சீனிவாசப்புரா தாலுகா பெல்கானஹள்ளி கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராகேஷ்(வயது 20) என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து ராகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராகேசின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து சீனிவாசப்புரா புறநகர் போலீசார் இதுபற்றி தீவிர விசாரணையில் நடத்தினர். மேலும் கொலையாளிகளையும் வலைவீசி தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் ராகேஷ் கொலை வழக்கில் சோமசேகர், நவீன், காலேஸ் மற்றும் தாசப்பா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதையடுத்து சோமசேகர்(28), நவீன்(27) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான சோமசேகரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
அதாவது சோமசேகரின் தங்கையை ராகேஷ் காதலித்துள்ளார். இதனால் கோபமடைந்த சோமசேகர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ராகேசை கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை உடலை விவசாய நிலத்தில் வீசியுள்ளனர். அதையடுத்து அவர்கள் தப்பிச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து சோமசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.