மாட்டு வியாபாரி கொலை வழக்கில் இந்து அமைப்பு தலைவர் உள்பட 5 பேர் ராஜஸ்தானில் கைது
மாட்டு வியாபாரி கொலை வழக்கில் இந்து அமைப்பு தலைவர் உள்பட 5 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநகர்:
மாட்டு வியாபாரி கொலை வழக்கில் இந்து அமைப்பு தலைவர் உள்பட 5 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாட்டு வியாபாரி
மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் இத்ரேஷ் பாஷா(வயது 45). மாட்டு வியாபாரி. இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இத்ரேஷ் பாஷாவை, இந்து அமைப்பின் தலைவர் புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கொலை செய்தது தெரியவந்த்து.
அதாவது மாடுகளை விலைக்கு வாங்கி சென்றபோது, அதை கடத்தி செல்வதாக நினைத்து இத்ரேஷ் பாஷாவை, புனித் கெரேஹள்ளி, அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி, ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், அதனை கொடுக்காததால் இத்ரேஷ் பாஷாவை அடித்துக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.
ராஜஸ்தானில் கைது
இதற்கிடையே புனித் கெரேஹள்ளி தலைமறைவானார். அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் புனித் கெரேஹள்ளி, ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதையடுத்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் பதுங்கி இருந்த புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை ராமநகருக்கு அழைத்து வரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராட்டு
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'மாட்டு வியாபாரி இத்ரேஷ் பாஷா, மாடுகளை கடத்தி செல்வதாக நினைத்து அவரை புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கி உள்ளனர். ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி ஓட, ஓட விரட்டி தாக்கி கொன்றுள்ளனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை துரிதமாக விசாரித்து தீர்வு கண்டுள்ள போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்' என்றார்.
இதற்கிடையே மாநில கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் 'இறுதியாக பூனை, எலி விளையாட்டு முடிந்தது. புனித் கெரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் கைதாகி உள்ளனர். ராமநகர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அவரது குழுக்களுக்கு எனது பாராட்டுகள். மேலும் வழக்கை விரைவாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.