'அடுத்த 10 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமர்' - அமித்ஷா


அடுத்த 10 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமர் - அமித்ஷா
x

நரேந்திர மோடி 40 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்காக மட்டுமே உழைத்துள்ளார் என அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்துள்ளது என்றும், பிரதமர் மோடி மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் பேசியதாவது;-

"நம் நாட்டில் செயல்திறன் மிக்க ஜனநாயகம் உள்ளது. செயல்திறன் கொண்ட ஒரு அரசாங்கத்தை பிரதமர் மோடி நிறுவியுள்ளார். யார் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதை செயல்திறன் தீர்மானிக்கும்.

சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நாடு வாய்ப்பளிக்கும். சிறப்பாக செயல்பட்டால் ஆட்சியில் நிலைத்திருப்போம். குறைகளைக் சரிசெய்யாவிட்டால் வெற்றி பெற முடியாது. அடுத்த 10 ஆண்டுகளைப் பற்றி நீங்கள் கேட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சியில் நீடிப்பார் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.

நான் பிரதமர் மோடியை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அவருடன் நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறேன். ஒரு வகையில், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதும் சரியே. ஏனென்றால், குடும்பம் உள்ளவர்கள், தங்கள் மகனையும், மகளையும் பிரதமராகவும், முதல்-மந்திரியாகவும் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.

நரேந்திர மோடி 40 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்காக மட்டுமே உழைத்துள்ளார். முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் 23 ஆண்டுகள் இருந்தும் அவர் விடுப்பு எடுத்து நான் பார்த்ததில்லை. பிரதமர் மோடி காலை 5 மணி முதல் இரவு 1 மணி வரை விடாமுயற்சியுடன் பணியாற்றுவதை நான் பார்த்திருக்கிறேன்.

பிரதமர் மோடி முதல்-மந்திரியாகவும், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்தபோது, அவர் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இல்லை. எதிர்க்கட்சிகள் கூட மோடியை எதற்கும் குறை சொல்ல முடியாது. அதுதான் அவரது வெளிப்படைத்தன்மை. பா.ஜ.க. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்திருக்கிறது."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Next Story