பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் - சரத் பவார் உறுதி


பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் - சரத் பவார் உறுதி
x

கோப்புப்படம்

பாஜகவுடன் கூட்டணி என்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு பொருந்தாது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சோலாப்பூர்,

சில நலன்விரும்பிகள் என்னை சம்மதிக்க வைக்க முயன்றாலும் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கோலாவில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், "பாஜகவுடன் கூட்டணி என்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு பொருந்தாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், எனது கட்சி (என்சிபி) பாஜகவுடன் செல்லாது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த தொடர்பும் எங்கள் அரசியல் கொள்கைக்கு பொருந்தாது" என்று அவர் கூறினார்.

இதனிடையே நேற்று சரத் பவார்- அஜித் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சந்திப்பு மராட்டிய அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு புனேவில் உள்ள தொழில் அதிபர் அதுல் சோர்டியா பங்களாவில் நடைபெற்றது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமேல் மிட்கரி கூறுகையில் ''இரு தலைவர்களுடைய சந்திப்பு, குடும்பம் தொடர்பானதாக இருந்திருக்கும்'' என்றார்.

தேசியவாத காங்கிரசில் 54 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் சரத் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது, அஜித் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. சிவசேனா கட்சியில் இருந்து 40 எல்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து துணை முதல்-மந்திரியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story