நேகா கொலை குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட கர்நாடக மந்திரி


நேகா கொலை குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட கர்நாடக மந்திரி
x

மாணவி நேகா, சக மாணவன் பயாசால் கல்லூரி வளாகத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

கர்நாடகா,

கா்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிரஞ்சன் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மகள் நேகா ஹிரேமட் (வயது 24).

நேகா அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். அந்த கல்லூரியில் பெலகாவியை சேர்ந்த பயாஜ் (24) என்பவரும் பி.சி.ஏ. படித்து வந்தார்.

இதனிடையே, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பயாஜ், இந்து மதத்தை சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர் தனது காதலை பலமுறை நேகாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பயாஜின் காதலை நேகா ஏற்கவில்லை. ஆனாலும் நேகாவை பயாஜ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் அவரை நேகா கண்டித்துள்ளார். இதனால் நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில், தேர்வு எழுத நேகா நேற்று முன் தினம் கல்லூரிக்கு வந்துள்ளார். தேர்வு எழுதிவிட்டு மதியம் நேகா கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும், நேகாவை சரமாரியாக தாக்கிய பயாஜ் அவரை கீழே தள்ளி உள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நேகாவை சரமாரியாக குத்தினார். இதில் தலை, கழுத்து, மார்பில் பலத்த காயமடைந்த நேகா சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் கல்லூரி வளாகத்தில் நடந்த கொலையால் மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. அதேவேளை, நேகாவை கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற பாயாசை சில மாணவர்கள் விரட்டிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பயாசை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

காங்கிரஸ் கவுன்சிலரின் மகளான கல்லூரி மாணவி நேகா சக மாணவன் பயாசால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லவ் ஜிகாத்தால் தனது மகள் கொலை செய்யப்பட்டதாக நேகாவின் தந்தையான காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிரஞ்சன் கூறுகையில், இது லவ் ஜிகாத் கொலை இல்லையென்றால் இதற்கு பெயர் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, நேகா கொலை குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்த கருத்து சர்ச்சையானது. செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மந்திரி, நேகாவும், பயாசும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், பயாசை விட்டு விலகி செல்ல நேகா முயற்சித்துள்ளார். மேலும், பயாசை திருமணம் செய்ய நேகா மறுத்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயாஸ் நேகாவை குத்திக்கொலை செய்துள்ளார். இது லவ் ஜிகாத் கொலை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

நேகா கொலை குறித்து மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வராவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது கருத்துக்கு பரமேஷ்வரா மன்னிப்புகோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது கருத்து நேகாவின் பெற்றோரை பாதித்திருந்தால் அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

அதேபோல், கொலையாளி பயாசின் தாயாய் மும்தாஜும் பொதுமன்னிப்புகோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், என் மகன் செய்த செயலுக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது மகன் பையாஜ் செய்த செயல் மிகவும் தவறானது' என்றார்.


Next Story