பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணை என்.ஐ.ஏ.யிடம் ஒப்படைப்பு: உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்


பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணை என்.ஐ.ஏ.யிடம் ஒப்படைப்பு: உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்
x

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைத்து இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

ஜம்மு,

காஷ்மீரின் ரஜோரியில் கடந்த 1 மற்றும் 2-ந்தேதிகளில் பயங்கரவாதிகள் இரட்டை தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.

புத்தாண்டில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காஷ்மீர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் அமித்ஷா

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி நேற்று காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், உயர்மட்ட அதிகாரிகளுடன் காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர் மனோஜ் ஜா மற்றும் பல்வேறு பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மாநில பாதுகாப்பு விஷயத்தில் 360 டிகிரி பார்வை இருக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

குடும்பத்தினர் உறுதி

இந்த நிகழ்ச்சிக்குப்பின் உள்துறை மந்திரி அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜோரியில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திப்பதற்காக ஜம்மு பிராந்தியத்துக்கு வந்தேன். ஆனால் மோசமான காலநிலை காரணமாக அங்கு செல்ல முடியவில்லை.

எனினும் 7 பேரின் குடும்பத்தினருடனும் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அந்த குடும்பத்தினர் அனைவரும், பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள்.

அவர்களிடமிருந்து இதுபோன்ற உறுதியைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாதுகாப்பு படைகள் தயார்

ரஜோரியில் சமீபத்தில் நட்நத பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணையை நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைத்தோம்.

இதைப்போல ஜம்முவில் கடந்த 1½ ஆண்டுகளில் நடந்த அனைத்து பயங்கரவாத சம்பவங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிப்பார்கள். இதற்கு தேவையான உதவிகளை காஷ்மீர் போலீசார் வழங்குவார்கள்.

காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்துள்ளோம். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் 100 சதவீதம் தயாராக இருப்பதாக பாதுகாப்பு நிறுவனங்கள் என்னிடம் தெரிவித்தன.

ஜம்மு பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மூன்று மாதங்களுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கு கால வரையறையுடன் கூடிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.


Next Story