பாரத ரத்னா விருது அறிவித்த சில மணிநேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த கட்சி


பாரத ரத்னா விருது அறிவித்த சில மணிநேரத்தில்  பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த கட்சி
x
தினத்தந்தி 9 Feb 2024 11:24 AM GMT (Updated: 9 Feb 2024 12:11 PM GMT)

முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

அதேவேளை, தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணியில் கட்சிகள் இணைவதும், வெளியேறுவதுமாக இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவராக ஜெயந்த் சவுதிரி செயல்பட்டு வருகிறார். இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதேபோல், கூட்டணியில் சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு முரண்பாடு நிலவி வந்தது.

இதனிடையே, ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுதிரியின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்கிற்கு மத்திய அரசு இன்று பாரத ரத்னா விருது அறிவித்தது.

இந்நிலையில், சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் இணைந்ததை உறுதிபடுத்தியுள்ள ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுதிரி இது தொடர்பாக கூறுகையில், பா.ஜ.க. கூட்டணி அழைப்பை என்னால் நிராகரிக்கமுடியவில்லை. வேறு எந்த அரசியல் கட்சியாலும் செய்யமுடியாத பணிகளை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை செய்துள்ளது' என்றார்.

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த நிகழ்வு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Next Story