சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு இதுவரை சமர்ப்பிக்கவில்லை - காங். தலைவர்
சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.
ஸ்ரீநகர்,
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நடைபெற்றுவருகிறது. யாத்திரையின் 129-வது நாளான இன்று ராகுல்காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் நடைபயணம் மேற்கொண்டனர்.
பாதயாத்திரையின் போது நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய், முதலில் ரஜோரியின் ரோங்கிரி மற்றும் ஜம்முவின் நர்வால் பகுஹ்டியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 நீக்கப்பட்டபோது பரப்பப்பட்டதுபோன்று ஜம்மு-காஷ்மீர் சூழ்நிலை இல்லை. இலக்கு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொலைகள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.
புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். தாக்குதலின்போது வீரர்கள் விமானம் மூலம் சிகிச்சைக்கு மாற்றுஇடத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டுமென சிஆர்பிஎப் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்துவிட்டார். எப்படி இவ்வாறான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது? புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதாக மத்திய பாஜக அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. மத்திய பாஜக அரசு பொய்களை மட்டுமே கூறி வருகிறது' என்றார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.