காங்கிரஸ் 'ஹீரோ' அல்ல 'ஜீரோ' - ராஜ்நாத் சிங்
சத்தீஷ்காரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத்துக்கு தடை விதிப்போம் என ராஜ்நாத் சிங் கூறினார்.
சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அங்குள்ள சீதாபூரில் பா.ஜனதா சார்பில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய ராணுவ மந்திரியுமான ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர் மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பூபேஷ் பாகேல் தலைமையிலான மாநில அரசு ஊழலில் திளைத்து வருகிறது. மாநிலத்தில் ஒரு வளர்ச்சி பணியை கூட காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. இந்த அரசின் செயல்பாட்டு அறிக்கையை மக்கள் கேட்டால், அது ஜீரோவாகவே (பூஜ்ஜியம்) இருக்கும். சிறந்த நிர்வாகம், வளர்ச்சி பணிகளில் அவர்கள் வெறும் பூஜ்ஜியம்தான்.
ஆனாலும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை தாங்களே ஹீரோக்களாக சொல்லிக்கொள்கின்றனர். அவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள். தேர்தலில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடத்துவதற்கான நேரம் வந்து விட்டது.
சத்தீஷ்காரில் கடந்த பா.ஜனதா ஆட்சியின்போது இடதுசாரி பயங்கரவாதம் மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இது கடுமையாக வளர்ந்து விட்டது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் இடதுசாரி பயங்கரவாதம் 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் ஒழிக்கப்படும். சத்தீஷ்காரில் கட்டாய மதமாற்றமும் அதிகரித்து விட்டது. இது கவலைக்குரிய அம்சம் ஆகும். யாரையும் கட்டாயமாக ஏன் மதமாற்ற வேண்டும்? பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற மதமாற்றத்துக்கு தடை விதிப்போம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.