ஒடிசா: பெட்ரூமில் விஷப்பாம்பை விட்டு மனைவி, குழந்தையை கொன்ற கணவன்


ஒடிசா: பெட்ரூமில் விஷப்பாம்பை விட்டு மனைவி, குழந்தையை கொன்ற கணவன்
x

ஆதாரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு குற்றவாளியை கைது செய்தனர்.

பெர்ஹாம்பூர்,

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், பாம்பைவிட்டு கடிக்க வைத்து மனைவி, மகளை கொன்ற இளைஞர் ஒரு மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா (வயது 25). அவரது மனைவி பசந்தி பத்ரா (வயது 23). அவர்களுக்கு 2020 இல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு டெபாஸ்மிதா (வயது 2) என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கணேஷ் பத்ரா ஒரு பாம்பாட்டியை சந்தித்து, பூஜை செய்வதற்காக பாம்பு வேண்டும் என்று கூறி, கடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பை வாங்கியிருக்கிறார்.

அக்டோபர் 9 ஆம் தேதி பிளாஸ்டிக் ஜாடியில் நாகப்பாம்பை கொண்டு வந்து மனைவியும், மகளும் படுத்திருந்த அறைக்குள் விட்டார். இவர் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை மனைவி மற்றும் மகள் இருவரும் பாம்பு கடித்து இறந்து கிடந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கை பதிவு செய்தனர். ஆனால் இருவரின் மரணத்தில் கணேஷ் பத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக அவரது மாமனார் கஞ்சம் காவல் கண்காணிப்பாளர் ஜக்மோகன் மீனாவிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால், போலீசாருக்கு ஆதாரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு குற்றவாளியை கைது செய்தனர்.

விசாரணையின்போது, அவர் முதலில் குற்றத்தை மறுத்தார். பாம்பு தானே அறைக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் கூறினார். பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையில், குற்றத்தை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.


Next Story