அசாமில் ராகுல்காந்தி யாத்திரையின் போது தாக்குதல்: முதல்-மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் - எதிர்க்கட்சிகளின் கூட்டணி


அசாமில் ராகுல்காந்தி யாத்திரையின் போது தாக்குதல்: முதல்-மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் - எதிர்க்கட்சிகளின் கூட்டணி
x

முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அவரது தோல்வியை ஏற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்த முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி விலக வேண்டும் என்று அசாமின் 'ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம்' வலியுறுத்தியுள்ளது.

15 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய எதிர்க்கட்சி மன்றத்தின் பொதுச் செயலாளராக அசாம் ஜாதிய பரிஷத் கட்சியின் தலைவர் லூரின்ஜோதி கோகோய் உள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த லூரின் ஜோதி மற்றும் ரைஜோர் தளத்தின் தலைவர் அகில் கோகோய் கூறியதாவது:-

அசாமின் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்ய வேண்டும். ஏனெனில் நமது மாநிலத்திற்கு விருந்தினராக வந்த நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வெட்கக்கேடானது.

நேற்று யாத்திரை அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அப்போது பாஜகவால் ஏவப்பட்ட குண்டர்கள் ராகுல் காந்தியின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசின் வாகனம் மீது கற்களை வீசினர். இந்த தாக்குதலில் அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போரா காயமடைந்தார்.

இந்தத் தாக்குதல்களுக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா காரணமில்லை என்று நாம் கருதினாலும், சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பராமரிக்க அவர் தவறியதை இது தெளிவாகப் பிரதிபலிக்கிறது. யாத்திரையின்போது நடத்தப்பட்ட தாக்குதல், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதில் முதல்-அமைச்சரின் இயலாமையை காட்டுகிறது.

மேலும் இது விருந்தோம்பல் மற்றும் கலாச்சாரத்திற்கு புகழ்பெற்ற ஒரு மாநிலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா அவரது தோல்வியை ஏற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினர்.


Next Story