காஷ்மீரில் பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானம்; துப்பாக்கி சூடு நடத்தி விரட்டிய இந்திய ராணுவம்


காஷ்மீரில் பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானம்; துப்பாக்கி சூடு நடத்தி விரட்டிய இந்திய ராணுவம்
x

எல்லையை கடந்து பறந்து வரும் ஆளில்லா விமானம் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.3 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் சமீபத்தில் அறிவித்தனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று நேற்றிரவு பறந்து வந்துள்ளது. மெந்தார் பகுதியில் நரமான்கோட் என்ற இடத்தில் அந்த ஆளில்லா விமானம் பறந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் அதனை கவனித்தனர்.

உடனடியாக உஷாரான அவர்கள், அதனை நோக்கி துப்பாக்கியால் 3 முறை சுட்டனர். இந்திய படையினரின் இந்த செயலை தொடர்ந்து, அந்த ஆளில்லா விமானம் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பி சென்றது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இந்திய வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அந்த பணி தொடர்ந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதை பொருட்கள், ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்களை சுமந்து கொண்டு, எல்லையை கடந்து பறந்து வரும் ஆளில்லா விமானம் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.3 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று காஷ்மீர் போலீசார் சமீபத்தில் அறிவித்து இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story