ஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் - கபில் சிபல்


ஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் - கபில் சிபல்
x

ஒட்டு மொத்த மக்களும் பயத்துடனே வாழ்கிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் எம்.பி. பேசினார்.

மதம் ஆயுதமாக...

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த, முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் எம்.பி., 'ரெப்ளக்சன்ஸ்: இன் ரைம் அண்ட் ரிதம்' (செய்யுள், சந்தத்தில் பிரதிபலிப்புகள்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். டெல்லியில் நடந்த இந்தப் புத்தகத்தின் அறிமுக விழாவில் கபில் சிபல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மதம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இது உலகம் முழுவதும் நடந்தாலும், மதத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா ஒரு மிகையான உதாரணமாக திகழ்கிறது.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்தியாவில் இன்று வெறுப்புணர்வு பேச்சில் அங்கம் வகிப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட சித்தாந்ததத்தில் நம்பிக்கை உடையவர்கள். அவர்களுக்கு எதிராக எதையும் செய்வதற்கு போலீஸ் விரும்பவில்லை என்பதுதான்.

வெறுப்புணர்வு பேச்சு

வெறுப்புணர்வு பேச்சினை பேசுகிறவர்கள் மீது வழக்கு போடுவதில்லை. எனவே அவர்களுக்கு தொடர்ந்து அவ்வாறு பேசுகிற தைரியம் வந்து விடுகிறது.

ஒட்டுமொத்த மக்களும் பயத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் மன ரீதியில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? அதனால் பயப்படுகிறார்கள். தொடர்ந்து பயத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

அமலாக்கத்துறை என்றால் பயப்படுகிறோம். சி.பி.ஐ. என்றால் பயப்படுகிறோம். அரசுக்கு பயப்படுகிறோம். போலீஸ்காரர்களுக்கு பயப்படுகிறோம். அனைவருக்கும் பயப்படுகிறோம். யார் மீதும் இனி நம்பிக்கை இல்லை.

நீதி கிடைக்குமா?

வக்கீலுக்கு தர பணம் இல்லை என்பதால் ஏழைகள் கோர்ட்டுக்கு வர முடியாது. கேரளாவை சேர்ந்தவரோ, வடகிழக்கில் உள்ளவரோ, மேற்கு வங்காளத்தில் வசிப்பவரோ, தென் மாநிலங்களில் உள்ளவர்களோ சுப்ரீம் கோர்ட்டுக்கு எப்படி வருவார்கள்? அதற்கான வழி அவர்களுக்கு இல்லையே. நீதித்துறை அமைப்பின் மீதான மக்கள் நம்பிக்கை மங்கி வருகிறது.

அடுத்து நியாயம் தேடுவது பிரச்சினையாக உள்ளது. நியாயம் என்றால் என்ன? உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை இருந்தால்தான் நியாயம். அந்த நம்பிக்கை குறைந்து வருவதாக நம்மில் பலரும் நம்புகிறோம். இந்திய மக்கள் அவ்வாறே நினைக்கிறார்கள்.

நான் தினந்தோறும் சந்திக்கிற மக்கள் என்னிடம் பேசுகிறபோது எங்களுக்கு நீதி கிடைக்குமா என்று கேட்கிறார்கள். என்னால் அவர்களுக்கு உறுதி அளிக்க முடியாது. அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு வழி இல்லை. ஏனென்றால் (அரசு) நிறுவன அமைப்புகள் அவர்களுக்கு உதவுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story