கவர்னரை திரும்பப்பெற 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள்: ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தார் வைகோ


கவர்னரை திரும்பப்பெற 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள்: ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தார் வைகோ
x

கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

புதுடெல்லி,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், அதனோடு கூட்டணியில் உள்ள கட்சிகளின் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ம.தி.மு.க. சார்பில் இது தொடர்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கிய இந்த நடவடிக்கையில் கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு முதல் கையெழுத்தை போட்டார்.

இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இப்படி 57 எம்.பி.க்கள், 32 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில்...

இந்த ஆவணங்களை 60 அட்டைப்பெட்டிகளில் அடைத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

முன்னதாக வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "தமிழ்நாடு கவர்னர் அரசியல் உள்நோக்கத்தோடும் தமிழ்நாடு அரசுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதால் அவரை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றிருக்கிறோம்.

இதை ஜனாதிபதியிடம் நேரில் கொடுப்பதற்கு அனுமதி கேட்டபோது நேரம் இல்லை என்று சொல்லிவிட்டனர். இதனால் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கிறோம். இதன்பிறகாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பார்ப்போம். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ் மக்களின் கருத்துகளை தெரிந்துகொள்வதற்குகூட ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் இல்லை என்பதை மக்களுக்கு சொல்வோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பா.ஜனதா அரசின் அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்றார்.

1 More update

Next Story