சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி சூடுக்கு பிரதமர் மோடி கண்டனம்
கோழைத்தனமான, கொடூர செயலை வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய ஐரோப்பிய நாடான சுலோவக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர், அரசு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று உரையாடி கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ராபர்ட் பிகோவின் வயிற்றில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். சுலோவக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான, கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் ராபர்ட் பிகோ விரைவில் குணமடைய விழைகிறேன்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.