இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் தன்னுடைய 96-வது வயதில் உயிரிழந்தார்.

இதையடுத்து இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"மகாராணி இரண்டாம் எலிசபெத் நம்முடைய காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். அவர் தன்னுடைய தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார். அவருடைய மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன.

2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு என்னுடைய இங்கிலாந்து பயணத்தின்போது மகாராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த சைகையை நான் எப்போதும் போற்றுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story