"இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்" - ஜே.பி.நட்டா
உலகிற்கு வழிகாட்டும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
புதுடெல்லி,
தமிழக பா.ஜ.க.வின் 'யுவா மோர்ச்சா' பிரிவு சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காணொலி வாயிலாக இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் சென்று இந்திய அரசியலில் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள மாற்றத்தை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.
2014-க்கு முன் நமது நாடு ஊழல் நிறைந்த நாடாக, கொள்கை முடங்கி, பின்தங்கிய நிலையில், மெதுவான வளர்ச்சி ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தது. இன்று நம் நாடு ஒரு பெரிய மாற்றத்தை தழுவியுள்ளது. பிரதமர் மோடியின் கீழ், உலகிற்கு வழிகாட்டும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
நமது தேசத்தின் இளைஞர்களை காணொலி காட்சி மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தேசிய இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சிக்காக தேஜஸ்வி சூர்யா மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை வாழ்த்துகிறேன். இந்த இளைஞர் பாராளுமன்றத்தின் மூலம் தேசத்தின் விஷயங்களில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிக்கும்.
இந்த மாபெரும் முயற்சி இங்கிருந்து தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பிடத்தக்க வகையில், தமிழ்நாடு வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட ஒரு சிறந்த நிலம். இது கோவில்கள், வேதங்கள் மற்றும் பாரம்பரியங்களின் தேசம். பழமையான மொழிக்கு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.
இளைஞர்களின் ஆற்றலைச் சேர்ப்பது, மக்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் முதிர்ந்த ஜனநாயகத்தின் அங்கமாக மாறுவது நமது பொறுப்பு."
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.