பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் பயணம்?
ரஷியா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி, உக்ரைன் செல்ல இருப்பது கவனம் பெற்றுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிறகு, உக்ரைனுக்கு இந்திய பிரதமர் செல்ல இருப்பது இதுவே முதல் முறையாகும். ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த உக்ரைன் பயணம் உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கியதில் இருந்து, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. சமீபத்தில், 2 நாள் பயணமாக ரஷியா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் புதினை சந்தித்தார். அப்போது, அவர் போர் தீர்வு அல்ல; சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புதினிடம் கூறியிருந்தார். இத்தகைய சூழலில் பிரதமர் மோடி உக்ரைன் செல்ல திட்டமிட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.