தென்ஆப்பிரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு; இருதரப்பு ஆலோசனை நடந்தது


தென்ஆப்பிரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு; இருதரப்பு ஆலோசனை நடந்தது
x
தினத்தந்தி 23 Aug 2023 9:21 AM GMT (Updated: 23 Aug 2023 10:45 AM GMT)

தென்ஆப்பிரிக்க அதிபரை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்த பின்னர் இருதரப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஜோகன்னஸ்பர்க்,

பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், பிரதமர் மோடி, தென்ஆப்பிரிக்காவில் அந்நாட்டு அதிபர் சிறில் ரமாபோசாவை இன்று சந்தித்து பேசினார். இதன்பின்னர் இருதரப்பு கூட்டம் ஒன்றும் நடந்தது.

இந்த கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய தரப்பில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற உள்ள திறந்த மற்றும் மூடிய நிலையிலான, முக்கிய நபர்கள் அனைவரும் கலந்து கொள்ள கூடிய கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.

இதன்பின்பு, கலாசார நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும். அதன்பின்பு அதிபர் ரமாபோசா, பிரதமர் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்க உள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்து வந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு, தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா விடுத்த அழைப்பை ஏற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, அந்நாட்டு துணை ஜனாதிபதி பால் ஷிபோகொசா மஷாதிலே வரவேற்றார்.

தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி நடனம் ஆடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதன்பின்னர் அவர், தென்ஆப்பிரிக்கா ஓட்டலுக்கு சென்றார். கூடியிருந்த இந்திய வம்சாவளியினரை நோக்கி நடந்து சென்றார். அவரை மக்கள் வரவேற்றனர். பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என இந்திய வம்சாவளியினர் முழக்கங்களை எழுப்பினர். பிரதமரின் இந்த பயணம் இரு நாடுகளின் 30-வது ஆண்டு தூதரக உறவை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


Next Story