ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்படும்- பிரதமர் மோடி வாக்குறுதி


ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்படும்- பிரதமர் மோடி வாக்குறுதி
x
தினத்தந்தி 20 Nov 2023 11:39 AM GMT (Updated: 20 Nov 2023 11:52 AM GMT)

ராஜஸ்தானுக்கு தேவை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அரசு. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: "நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் பெண்களுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அக்கூட்டணி கட்சித் தலைவர்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக கண்டிக்கத்தக்க கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்த காங்கிரஸ் தலைவரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரசின் உண்மை முகம் இதுதான்.

மொத்த நாடே வளர்ச்சியை நோக்கி இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் நாடு வளர்ச்சியை எட்டும்போது ராஜஸ்தான் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதற்கு ராஜஸ்தானுக்கு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. இங்கு பாஜக ஆட்சி ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்படும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று பிரதமர் மோடி பேசினார்.


Next Story