"பிரதமர் மோடி 22,500 இந்திய மாணவர்களை மீட்பதற்காக உக்ரைன் போரை நிறுத்தினார்" - ஜே.பி.நட்டா


பிரதமர் மோடி 22,500 இந்திய மாணவர்களை மீட்பதற்காக உக்ரைன் போரை நிறுத்தினார் - ஜே.பி.நட்டா
x

இந்திய வரலாற்றில் மோடியைப் போல் சிறந்த பிரதமர் வேறு யாரும் இல்லை என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள பொது கூட்டங்கள், பேரணிகள், யாத்திரைகளை நடத்தி வருகின்றன.

இதில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இதன்படி, சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி. நட்டா கர்நாடகாவின் உடுப்பி நகருக்கு நேற்று வருகை தந்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"இந்திய வரலாற்றில் மோடியைப் போல் சிறந்த பிரதமர் வேறு யாரும் இல்லை. இந்திய மாணவர்கள் 22,500 பேரை மீட்பதற்காக ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தினார். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சியில் தோன்றும் போது இன்றும் முகமூடி அணிந்து பேசுகிறார். ஏனெனில், அமெரிக்காவில் 76 சதவீத தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது. ஆனால் இங்கே, யாரும் முகமூடி அணியவில்லை என்பதையும், அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது. ஏனென்றால் பிரதமர் நமக்கு 220 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளார்.

மோடி ஜியின் வலுவான தலைமையின் கீழ், நம் நாட்டு மக்களுக்கு கோவிட்-க்கு எதிராக இரட்டை டோஸ், பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது. நாம் அனைவரும் முகமூடி அணியாமல் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் செயல்திட்டத்தால் மட்டுமே. அவர் நமக்கு பாதுகாப்பு கவசத்தைக் கொடுத்துள்ளார்.

விவசாயிகள், பிற்படுத்தப்பட்டவர்கள், இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பது தான் எங்கள் நோக்கம். மக்களின் வாழ்வில் மாற்றத்தை உறுதி செய்து வருகிறோம். விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளும் மற்ற தொடர்புடைய அபிவிருத்திகளுடன் பலப்படுத்தப்பட்டு வருகின்றன."

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.



Next Story