பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை - மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை - மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 25 March 2023 12:48 AM GMT (Updated: 25 March 2023 11:45 AM GMT)

பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை தந்து கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான கால அட்டவணை இன்னும் ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஏற்கனவே தீவிரமாக தயாராகிள்ளன. மூன்று கட்சிகளும் யாத்திரை பெயரில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்கள். இந்த யாத்திரைகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டன. ஜனதா தளம்(எஸ்) 93 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்த சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அவ்வப்போது கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார். அவர் இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை, தார்வார் ஐ.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டியா, பெலகவரி, தார்வார் உள்ளிட்ட இடங்களில் அவர் 'ரோடு ஷோ'வும் நடத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி 7-வது முறையாக இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் காலையில் தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு செல்லும் அவர், அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார்.

பிறகு அவர் பெங்களூரு வந்து, இங்கு கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு சென்று பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர், சிவமொக்காவுக்கு சென்று பிறகு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story