13-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி நிதியுதவி - இன்று விடுவிப்பு
விவசாயிகளுக்கு 13-வது தவணையாக ரூ.16,800 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கிறார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த நிதி வழங்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டாலும், 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
8 கோடி பேருக்கு பலன்
இந்த திட்டத்தின் 13-வது தவணையாக ரூ.16,800 கோடியை பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கிறார். கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் திட்ட பயனாளிகள் உள்பட 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நரேந்திர சிங் தோமர் உள்பட மத்திய மந்திரிகளும் பங்கேற்கின்றனர். இதன்மூலம் நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கிடைக்கும். ஹோலி பண்டிகை மற்றும் குறுவை அறுவடையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கிராமப்புற வளர்ச்சி
இந்த திட்டத்தின் 11 மற்றும் 12-வது தவணை நிதி கடந்த ஆண்டு முறையே மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டன. இந்த திட்டத்துக்காக இதுவரை ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டு இருப்பதாக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, விவசாயிகளுக்கு கடன் தடைகளைத் தளர்த்துதல், விவசாய முதலீடுகளை உயர்த்தியது போன்ற பயன்களை இந்த திட்டம் வழங்கியிருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, விவசாயிகளின் இடர் நீக்கும் திறனை அதிகரித்து, அதிக உற்பத்தி முதலீடுகளுக்கு வழிவகுத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.