பெலகாவியில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு


பெலகாவியில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2022 6:45 PM GMT (Updated: 18 Dec 2022 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் நிலையில் மராட்டிய அமைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதையொட்டி அங்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் நிலையில் மராட்டிய அமைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதையொட்டி அங்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குளிர்கால கூட்டத்தொடர்

கர்நாடக சட்டசபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது. அதாவது கவர்னர் உரைக்காக இரு சபைகளின் கூட்டு கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பெலகாவியில் உள்ள சுவர்ண விதான சவுதாவில் நடத்துவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் 19-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியதும், சபையின் இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த சபையின் தற்போதைய உறுப்பினராகவும், துணை சபாநாயகராவும் பணியாற்றி வந்த ஆனந்த் மாமணி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்தார்.

புயலை கிளப்ப திட்டம்

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். சபை அலுவல்கள் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வழக்கம்போல் நடைபெறும். இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் முடிவு செய்துள்ளன.

முக்கியமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, 40 சதவீத கமிஷன் விவகாரம், கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு, கர்நாடகம்-மராட்டியம் இடையே நிலவும் எல்லை பிரச்சினை உள்பட பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் வடகர்நாடகத்தில் நிலவும் பிரச்சினைகள் முக்கியமாக கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மகதாயி நதி நீர் பிரச்சினை உள்ளிட்டவற்றையும் எழுப்ப அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

எல்லை பிரச்சினை

சமீபத்தில் தான் கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை எழுந்தது. பெலகாவி தங்களுக்கே சொந்தம் என்று மராட்டியம் கூறி வருகிறது. அதற்கு பதிலடி கொடுத்த கர்நாடகம், மராட்டியத்தில் உள்ள சோலாப்பூர் தங்களுக்கு சொந்தம் என்று கூறியது. இதனால் இரு மாநிலங்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து கூட்டம் நடத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மோதல் போக்கை தவிா்க்க மந்திரிகள் மட்டத்தில் இருதரப்பிலும் 6 பேர் கொண்ட குழுவை அமைக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை இரு மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.

மராட்டியத்திற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பெலகாவியில் சுவர்ண விதான சவுதாவை கட்டியுள்ள கர்நாடகம் அங்கு ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடரை நடத்தி வருகிறது. இதற்கு அங்குள்ள மராட்டிய ஏகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்.) அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கை. அதேபோல் இந்த முறையும் அந்த அமைப்பு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு கூட்டத்திற்கும் அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க ஆளும் பா.ஜனதா கட்சியும் தயாராகியுள்ளது.

போலீஸ் குவிப்பு

எல்லை பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பெலகாவியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 11 மாவட்ட கூடுதல் சூப்பிரண்டுகள், 43 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 95 சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், 241 சப்-இன்ஸ்பெக்டர்கள், 298 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஆயிரத்து 829 ஏட்டுகள், ஆயுதப்படை போலீசார் 800 பேர், அதிவிரைவுப்படையை சேர்ந்த 170 பேர், 35 கருடா படை போலீசார், வயர்லெஸ் போலீசார் 100 பேர், 100 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெலகாவியில் முக்கிய சர்க்கிள்கள், பதற்றமான பகுதிகள், மராட்டியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

26 சோதனை சாவடிகள்

கர்நாடகம்-மராட்டியம் இடையே மொத்தம் 23 தொடர்பு சாலைகள் உள்ளன. அவற்றில் 26 சோதனை சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. 12 தீயணைப்பு வாகனங்கள், 16 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒரு கருடா படை, 60 அரசு பஸ்கள் சுவர்ண விதான சவுதா அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெலகாவியில், சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவதற்கு எதிராக எம்.இ.எஸ். அமைப்பு சார்பில் மகா மேளா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மராட்டிய மாநில எல்லை ஆலோசனை குழு தலைவர் தைரியசீலா எம்.பி. கலந்து கொள்கிறார். அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

50 அமைப்புகள் போராட்டம்

கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் சுவர்ண விதான சவுதா அருகே போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கர்நாடக அரசு ஏற்கனவே இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இது போல் இன்னும் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பெலகாவியில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளன. போராட்டம் நடத்தும் அமைப்புகளுக்கு சுவர்ண விதான சவுதா அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மட்டுமே அவர்கள் போராட்டம் நடத்த வேண்டும். சுவர்ண விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்-மந்திரி எச்சரிக்கை

சட்டசபை கூட்டத்தொடர் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எல்லை பிரச்சினையில் எம்.இ.எஸ். அமைப்பினர் பெலகாவியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிந்தேன். அந்த அமைப்பினர் கடந்த 50 ஆண்டுகளாக கர்நாடகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த அரசுக்கு தெரியும். அவர்களின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் பணியை அரசு செய்யும்'' என்றார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு தங்கும் இடம்

சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்-மந்திரி, மந்திரிகள், எதிா்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் அனைவருக்கும் பெலகாவியில் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு அரசு விருந்தினர் இல்லங்களில் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தனியார் ஓட்டல்களில் தங்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தங்கும் ஓட்டல்களில் காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படும். சுவர்ண விதான சவுதாவில் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ளன.


Next Story