பிட்காயின் முறைகேடு; போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை


பிட்காயின் முறைகேடு; போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை
x

பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பெங்களூரு:

பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பா.ஜனதா ஆட்சியில்...

கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின்போது பிட்காயின் மோசடி அரங்கேறியது. பெங்களூருவை சேர்ந்த பிரபல ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா, அரசு இணையதளங்களை முடக்கி பணமோசடி செய்தார். இதேபோல் அவர் கிரிப்டோ கரன்சி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளையும் முடக்கி கைவரிசை காட்டி இருந்தார். சர்வதேச போலீசாரால் அவர் தேடப்பட்டு வந்தார். இதற்கிடையே பெங்களூரு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணாவை மிரட்டி பிட்காயின் மற்றும் வங்கி டெபாசிட்டுகளை சட்டவிரோதமாக பெற்று கொண்டனர்.

மேலும் பிட்காயின் மோசடி வழக்கில் இருந்த சில முக்கிய ஆவணங்களையும் அவர்கள் அழித்து விட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், சிறப்பு புலனாய்வு குழுவை கொண்டு பிட்காயின் முறைகேடு விவகாரம் பற்றி விசாரிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி சிறப்பு விசாரணை குழுவினர், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சி.ஐ.டி. போலீசார், அரசியல் பிரமுகர்கள் அவரை மிரட்டி பணம் பறித்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

சைபர் நிபுணர்

இந்த நிலையில் பிட்காயின் மோசடி விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் உள்ள 5 சி.ஐ.டி. போலீசாரின் வீடுகளில் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். சைபர் நிபுணர் சந்தோஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் பூஜாரி உள்பட 5 போலீசாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மடிக்கணினியை ஒப்படைக்காததால் தான் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story