பெங்களூரு நகர் முழுவதும் ஒரே நாளில் போலீசார் அதிரடி; 1,344 ரவுடிகளின் வீடுகளில் சோதனை


பெங்களூரு நகர் முழுவதும் ஒரே நாளில் போலீசார் அதிரடி; 1,344 ரவுடிகளின் வீடுகளில் சோதனை
x

பெங்களூரு நகர் முழுவதும் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி கொடுத்திருந்தனர். ரவுடிகளின் வீடுகளில் இருந்து 9 கிலோ கஞ்சா, 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு நகர் முழுவதும் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி கொடுத்திருந்தனர். ரவுடிகளின் வீடுகளில் இருந்து 9 கிலோ கஞ்சா, 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரவுடிகளின் வீடுகளில் சோதனை

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்களை மிரட்டி பணம், செல்போன், நகைகளை பறித்து செல்லும் நிகழ்வுகளும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக ரவுடிகள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே பெங்களூருவில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க அடிக்கடி, அவர்களது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்ற தயானந்த், நகரில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அதே நேரத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த 40-க்கும் மேற்பட்ட ரவுடிகள், கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தும், ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, ஒயிட்பீல்டு ஆகிய 8 போலீஸ் மண்டலங்களில் இருக்கும் அனைத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில் நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

1,344 பேர் வீடுகளில் நடந்தது

அதாவது மேற்கு மண்டலத்தில் 177 ரவுடிகள், தெற்கு மண்டலத்தில் 175 ரவுடிகள், வடக்கு மண்டலத்தில் 254 ரவுடிகள், மத்திய மண்டலத்தில் 90 ரவுடிகள், கிழக்கு மண்டலத்தில் 207 ரவுடிகள், வடகிழக்கு மண்டலத்தில் 156 ரவுடிகள், தென்கிழக்கு மண்டலத்தில் 160 ரவுடிகள், ஒயிட்பீல்டு மண்டலத்தில் 125 ரவுடிகள் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் இந்த சோதனையை நடத்தி இருந்தார்கள்.

அதிகாலை 5 மணியளவில் நகர் முழுவதும் ஒரே நேரத்தில் ரவுடிகளின் வீடுகளில் அனைத்து மண்டலங்களிலும் போலீசார் இந்த சோதனையை நடத்தி இருந்தனர். அதிகாலை 5 மணியில் இருந்து காலை 10 மணிவரை என தொடர்ந்து 5 மணிநேரம் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. பின்னர் 1,344 ரவுடிகளையும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

9 கிலோ கஞ்சா பறிமுதல்

அங்கு ரவுடிகள் தற்போது செய்து வரும் தொழில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கிறார்களா? சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். குற்றங்களில் ஈடுபடுவதை விட்டு விட்ட ரவுடிகளை சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், போலீஸ் சோதனையின் போது ரவுடிகளின் வீடுகளில் கஞசா, போதைப்பொருட்கள், திருட்டு வாகனங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 9 கிலோ கஞ்சா உள்ளிட்ட பிற போதைப்பொருட்களையும், 16 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி இருந்தார்கள்.

6 வழக்குகள் பதிவு

மேலும் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 46 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் போலீசார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் பிரபல ரவுடிகளாக இருக்கும் குமரேஷ், பசவேசுவராநகரை சேர்ந்த சந்தீப், மாகடி ரோடுவை சேர்ந்த தர்ஷன், காமாட்சி பாளையாவை சேர்ந்த விஷ்ணு ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சந்தீப் வீட்டில் 500 கிராம் கஞ்சா சிக்கி இருந்தது.

சோதனையின் போது கஞ்சா, போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர்கள், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த ரவுடிகள் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் ஒரே நாளில் 1,344 பேரின் வீடுகளில் நடந்த இந்த சோதனையில் ரவுடிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.


Next Story