'வீட்டில் தாய்மொழியிலேயே பேசுங்கள்' - மாணவர்களிடம் அமித்ஷா வலியுறுத்தல்


வீட்டில் தாய்மொழியிலேயே பேசுங்கள் - மாணவர்களிடம் அமித்ஷா வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 28 Aug 2022 9:55 PM GMT (Updated: 2022-08-29T03:28:56+05:30)

வீட்டில் தாய்மொழியிலேயே பேசுங்கள் என்று மாணவர்களிடம் அமித்ஷா வலியுறுத்தினார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:-

'புதிதாக பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். நாட்டையும், சமூகத்தையும் மேம்படுத்த நீங்கள் உழைக்க வேண்டும். வாழ்வில் நீங்கள் திருப்தியும் சந்தோஷமும் பெற வேண்டுமானால், மற்றவர்களுக்காக உழைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

மாணவர்களும், இளைஞர்களும் எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். ஆனால் உங்கள் தாய்மொழியை பாதுகாத்திடுங்கள். வீட்டில் தாய்மொழியிலேயே பேசுவதையும், எழுதுவதையும், படிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அரசும், என்ஜினீயரிங், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ படிப்புகளை பிராந்திய மொழிகளில் கொண்டுவருவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நாட்டின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு அறிவையும், திறனையும் வழங்கும் நோக்கில் புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை நாடு கொண்டாடும் இவ்வேளையில் மாணவர்கள் பட்டம் பெறுவது முக்கியமானது.

யார் யாரோ தங்களின் எல்லாவற்றையும் இழந்துதான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்தியா மலர்ந்துள்ளது என்பதை மாணவர்கள் ஒரு கணம்கூட மறக்கக்கூடாது. மாணவர்கள் பெறும் பட்டம் அவர்களுக்கு பயன்கொடுக்கும். அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தால், ஒட்டுமொத்த நாடும் பயன் பெறும்.' என்று அவர் கூறினார்.


Next Story