ரூ.208 கோடியில் ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்துவைத்தார்


ரூ.208 கோடியில் ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)

பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனத்தில் ரூ.208 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

பெங்களூரு:

பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனத்தில் ரூ.208 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

கிரையோஜெனிக் என்ஜின்

பெங்களூருவில் எச்.ஏ.எல். (இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட்) நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு இலகுரக போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த நிறுவன வளாகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு எச்.ஏ.எல். மற்றும் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

அதன்படி, எச்.ஏ.எல். நிறுவன வளாகத்தில் ரூ.208 கோடி செலவில் 4,500 சதுர மீட்டரில் இந்தியாவின் ராக்கெட் ஏவுவதற்கு பயன்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் (சி.இ.20) என்ஜின் மற்றும் செமி-கிரையோஜெனிக் (எஸ்.இ.2000), 70 உயர்-தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பரிசோதனை வசதிகள் கொண்ட கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.

அதன் திறப்பு விழா எச்.ஏ.எல். நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு அந்த ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் உற்பத்தி மையத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும் அந்த மையத்தை பார்வையிட்டார். பின்னர் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:-

வாழ்க்கையில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ராக்கெட் மனிதராக இருந்தார். மற்றொருபுறம் தனது சமூக பணியுடன் தொழில்நுட்ப வளர்ச்சி பாதையை அவர் பின்பற்றினார். அறிவியலால் குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்த முடியும். இது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். "கலாம்-ராஜு ஸ்டென்டு" கருவியை உருவாக்கி அப்துல் கலாமும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அது குறைந்த விலையில் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு கிடைத்தது.

அதாவது முற்றிலும் நாம் சொந்தமாக தயாரிக்கும் விஷயங்களால் ஒரு சாதகமான தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும் என்பதை கூறுகிறேன். அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கடும் உழைப்பால் மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும். விஞ்ஞானிகள் சமூக பொறுப்பை உணர்த்தும் பாதையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

பசவராஜ் பொம்மை

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, இஸ்ரோ தலைவர் சோம்நாத், எச்.ஏ.எல். தலைவர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து எச்.ஏ.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எச்.ஏ.எல். நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் என்ஜின் உற்பத்திக்கு முந்தைய தர திட்டம், வரைபடம், என்ஜின் உற்பத்திக்கான நடைமுறைகளை உருவாக்கும் வசதிகளும் தொடங்கி இருக்கின்றன. வருகிற 2023-ம் ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் என்ஜின் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம்.

செயற்கைகோள் திட்டங்கள்

திரவ உந்துவிசை டேங்க், செயற்கைகோள்களை ஏவும் போலார் செயற்கைகோள்கள் ஏவும் ராக்கெட்டுகள், ஜி.எஸ்.எல்.வி.-எம்.கே.-3 ராக்கெட்டு வடிவமைப்புகள், ஜி.எஸ்.எல்.வி.-2 ராக்கெட் இணைப்புகளின் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இஸ்ரோவின் செயற்கைகோள் திட்டங்களுக்கு ஒரே கூரையின் கீழ் ஒட்டுமொத்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தி செய்து வழங்கப்படும். இந்த மையம் மூலம் அதிக திறன் கொண்ட ராக்கெட் என்ஜின்களை உற்பத்தி செய்வதில் நாம் சுயசார்பு நிலையை அடைவோம். உலகம் முழுவதும் ராக்கெட்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் எச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த கிரையோெஜனிக் என்ஜின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இஸ்ரோ தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது நாடாக சேர்ந்தது. வரும் காலத்தில் விண்வெளி குறித்த ஆராய்ச்சி கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை சார்ந்தே இருக்கும்.

வைரலாஜி ஆராய்ச்சி நிறுவனம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பெங்களூருவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வைரஸ் குறித்த மண்டல வைராலஜி ஆராய்ச்சி நிறுவனத்தையும் காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story