உத்தர பிரதேச நியாய யாத்திரையில் இணைகிறார் பிரியங்கா காந்தி; காங்கிரஸ் வட்டாரம் தகவல்


உத்தர பிரதேச நியாய யாத்திரையில் இணைகிறார் பிரியங்கா காந்தி; காங்கிரஸ் வட்டாரம் தகவல்
x
தினத்தந்தி 22 Feb 2024 5:13 PM IST (Updated: 22 Feb 2024 6:13 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தின் மேற்கே மீதமுள்ள அனைத்து பகுதிகளில் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்விலும் பிரியங்கா காந்தி பங்கேற்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

நாட்டில் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசாரம், பேரணி ஆகியவற்றுக்கான ஆலோசனை, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 15 மாநிலங்களை உள்ளடக்கிய 6,700 கி.மீ. தொலைவை நடைபயணம் வழியே கடந்து செல்ல திட்டமிட்டு உள்ளார்.

இந்த யாத்திரையில், அவருடைய சகோதரி மற்றும் காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கடந்த 16-ந்தேதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் பாதித்த நிலையில், அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை. அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நீரிழப்பு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் வருகிற 24-ந்தேதி அன்று உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில், பிரியங்கா காந்தி கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலில், சந்தவுலி பகுதியில் யாத்திரையில் பங்கேற்க இருந்த நிலையில், உடல்நல குறைவால் பிரியங்காவின் பங்கேற்பு ரத்து செய்யப்பட்டது.

எனினும், இந்த முறை உடல்நலம் தேறி வந்துள்ள அவர், உத்தர பிரதேசத்தின் மேற்கே மீதமுள்ள அனைத்து பகுதிகளில் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்விலும் பங்கேற்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த யாத்திரையில் கலந்து கொள்ள வரும்படி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வருகிற 24-ந்தேதி காலையில் இந்த யாத்திரை தொடங்க உள்ளது. மொராதாபாத் நகரில் தொடங்கும் இந்த யாத்திரை, சம்பல், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா மாவட்டங்களில் செல்வதுடன், ராஜஸ்தானின் தோல்பூர் நகரை வருகிற ஞாயிற்று கிழமை சென்றடையும்.

எனினும், பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரையிலான நாட்களில், யாத்திரை தற்காலிக நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.

இதன்பின்னர், மார்ச் 2-ந்தேதி தோல்பூரில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கும். அதன்பின்னர், மொரீனா, குவாலியர், ஷிவ்புரி, குணா, ஷாஜாப்பூர் மற்றும் உஜ்ஜைன் ஆகிய பகுதிகளில் யாத்திரை நடைபெறும்.

இதன்பின்பு, மார்ச் 5-ந்தேதி மதியம் 2 மணியளவில் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மகாகாலேஷ்வர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். கடைசியாக, இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, 2022-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி அவர் இந்த கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.


Next Story