தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்


தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை நிறுத்த கோரி கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக அணைகளில் இருந்து 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே நீர் வழங்குவதில் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார், கர்நாடக அணைகளில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மண்டியா மற்றும் மைசூர் மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் 2-வது நாளாக விவசாயிகள், கேஆர்எஸ் அணை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் மேலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தர்ஷன் புட்டன்னய்யாவும் பங்கேற்றார். அத்துடன் நிற்காமல் விவசாயிகளுடன் சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் சென்ற எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டன்னய்யா, அங்கு தர்ணாவில் ஈடுபட்டார்.

மேலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து இருந்த நிலையில் தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிராகவே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story