தங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யுங்கள் - வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு


தங்க நகைக்கடன்களை ஆய்வு செய்யுங்கள் - வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
x

கோப்புப்படம்

பொதுத்துறை வங்கிகள், நகைக்கடன் வழங்குவதில் விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பது இல்லை என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு புகார்கள் எழுந்தன.

புதுடெல்லி,

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்க நகைகளை அடமானமாக பெற்று கடன் வழங்கி வருகின்றன. தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத தொகையை மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி விதிமுறை ஆகும்.

இருப்பினும், கொரோனா காலத்தில் இதில் தளர்வு அளிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், விவசாயம் சாராத நகைக்கடன்களுக்கு நகை மதிப்பில் 90 சதவீதம்வரை கடன் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தளர்வு அளித்தது. இந்த தளர்வு, 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை நீடித்தது.

இதற்கிடையே, பொதுத்துறை வங்கிகள், நகைக்கடன் வழங்குவதில் விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பது இல்லை என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன.

கட்டணம், வட்டி வசூலிப்பது மற்றும் நகைக்கடனை முடிப்பது, கடனை ரொக்கமாக திருப்பி செலுத்துவது போன்றவற்றில் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை என்று தெரிய வந்தது. விதிமீறலில் ஈடுபட்டதால், ஐ.ஐ.எப்.எல். நிதி நிறுவனம் நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது.

இதையடுத்து, அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவை துறை ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், "பொதுத்துறை வங்கிகள், தங்களது நகைக்கடன் துறையின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிவரை வழங்கப்பட்ட நகைக்கடன்களுக்கு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்கிறதா, வங்கியின் கொள்கை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story