ஊதிய உயர்வு இல்லை, மரியாதையும் இல்லை: வேலையை விட்டதை கொண்டாடிய வாலிபர்
வேலையை விட்டு நின்றதை வாலிபர் ஒருவர் இசை வாத்தியங்கள் முழங்க கொண்டாடிய வினோத சம்பவம் புனேயில் நடந்து உள்ளது.
மும்பை,
புனேயை சேர்ந்தவர் அங்கித். இவர் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நிறுவனத்துக்காக கடுமையாக உழைத்தும் அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதவிர நிறுவன உரிமையாளர், ஊழியரை மதிப்பதும் இல்லை என தெரிகிறது. இது அங்கித்துக்கு கடும் வேதனையை அளித்தது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர், வேலையை விடவும் தைரியம் இல்லாமல் வேலைக்கு தொடா்ந்து சென்று வந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் வேலையை விட முடிவு செய்தார். வேலையில் இருந்த போது கடும் வேதனைகளையும், அவமானங்களையும் சந்தித்த அவர் விலகி செல்லும் போது உற்சாகமாக கொண்டாட முடிவு செய்தார். எனவே பணியை ராஜினாமா செய்து, கடைசி நாள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவருக்காக வெளியே டோல் இசைக்கலைஞர்கள், நண்பர்கள் தயாராக இருந்தனர்.
வெளியே வந்தவுடன் அவர் இசை வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வேலையை விட்டு சென்றார். இந்த கொண்டாட்டங்கள் அவர் வேலை பார்த்த நிறுவன மேலாளர் முன்னிலையிலேயே நடந்தது. இதை பார்த்து அவர் சற்று கடுப்பாகிதான் போனார். வேலையில் இருந்து நின்றதை வாலிபர் கொண்டாடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அந்த வீடியோவை பார்த்து தங்களது கருத்தையும் பகிர்ந்து உள்ளனர்.
வேலையை ராஜினாமா செய்த பின் அங்கித் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார். அவரது புதிய பயணத்தை துவக்க ஜிம் ஷூக்களை அவரது நண்பர் அனிஷ் பகத் பரிசாக வழங்கி உள்ளார். அங்கித்தின் பாடம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று அனிஷ் பகத் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். நீங்கள் ஒரு சிறந்த பயிற்சியாளரைத் தேடுகிறீர்களானால், @aniketrandhir_1718ஐத் தொடர்புகொள்ளலாம், என்று பகத் பதிவிட்டுள்ளார்.