வினாத்தாள் கசிந்த விவகாரம்; உத்தர பிரதேச மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் அதிரடி நீக்கம்


வினாத்தாள் கசிந்த விவகாரம்; உத்தர பிரதேச மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் அதிரடி நீக்கம்
x

Image Courtesy : ANI

கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வை ரத்து செய்து உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.

இந்நிலையில், இந்த தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, கான்ஸ்டபிள் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனவும் உத்தர பிரதேச மாநில அரசு கடந்த 24-ந்தேதி உத்தரவிட்டது.

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு அதிரடிப்படை (STF) விசாரணை நடத்தும் என உத்தர பிரதேச அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உத்திர பிரதேச மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் தலைவர் ரேணுகா மிஸ்ராவை பதவிநீக்கம் செய்து உத்தர பிரதேச மாநில அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பதவிநீக்கம் செய்யப்பட்ட ரேணுகா மிஸ்ரா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விஜிலன்ஸ் இயக்குனர் ராஜீவ் கிருஷ்ணாவுக்கு காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியத்தின் தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story