வளர்ப்பு நாயை கொன்றதால் ஆத்திரம்; 20 தெரு நாய்களை சுட்டுக் கொன்ற 3 பேர் கைது


வளர்ப்பு நாயை கொன்றதால் ஆத்திரம்; 20 தெரு நாய்களை சுட்டுக் கொன்ற 3 பேர் கைது
x

தனது வளர்ப்பு நாயை தெரு நாய்கள் கொன்றதால் ஆத்திரமடைந்த நரசிம்ம ரெட்டி, 20 தெரு நாய்களை சுட்டுக் கொன்றுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் என்ற கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் சுமார் 20 தெருநாய்களை சுட்டுக்கொன்றனர். மேலும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பல்வேறு நாய்களுக்கு படுகாயமும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்தபடி காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் தெருநாய்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தெரு நாய்களை சுட்டுக்கொன்றது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவர் தனது மாமியார் வீடு இருக்கும் கிராமத்திற்குச் சென்றபோது அங்குள்ள தெரு நாய்கள் அவரது இரு வளர்ப்பு நாய்களை கடித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஒரு நாய் உயிரிழந்த நிலையில், மற்றொரு நாய்க்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது வளர்ப்பு நாயை தெரு நாய்கள் கடித்துக் கொன்றதால், ஆத்திரத்தில் நரசிம்ம ரெட்டி தனது நண்பர்கள் 2 பேரின் உதவியுடன் நள்ளிரவில் பென்ஸ் காரில் வந்து 20 தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story