ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி வாழ்த்து..!


ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி வாழ்த்து..!
x

ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

தொடக்கம் முதலே திரவுபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார். இதில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளில் 2,824 வாக்குகள் பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மொத்தம் 6,76,803 வாக்குகள் மதிப்பு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு 1,877 வாக்குகள் பெற்றுள்ளார். அவரின் மொத்த வாக்குகள் மதிப்பு 3,80,177.

இதன்மூலம் திரவு முர்மு நாட்டின் 15ஆவது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ளார். திரவுபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவை வாழ்த்துகிறேன்.

நமது அரசியலமைப்பின் இலட்சியங்களைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருப்பதற்கும், குறிப்பாக தேசம் பல கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, நாட்டின் தலைவராக நாடு உங்களை எதிர்பார்க்கும்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.


Next Story