இந்தியாவின் பிரதமராகும் தகுதி ராகுல்காந்திக்கு உள்ளது - சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்
இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி தகுதியானவர் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
ஸ்ரீநகர்,
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பல மாநிலங்களை கடந்த ராகுல்காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.
ஜம்முவின் சந்த்வால் பகுதியில் இன்று பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பங்கேற்றார். ராகுல்காந்தியுடன் இணைந்த சஞ்சய் ராவத் நடைபயணம் மேற்கொண்டார்.
ராகுல்காந்தியுடன் 13 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்ட சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சித்தாந்த ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகள் இருந்தபோது ராகுல்காந்தி தனது ஆளுமை குணங்களை தற்போது வெளிக்காட்டியுள்ளார்.
2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார். ராகுல்காந்தி அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்.
இந்திய பிரதமராகும் தகுதி ராகுல்காந்திக்கு உள்ளது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைவராலும் நடைபயணம் மேற்கொள்ள முடியாது.
இந்த நடைபயணத்திற்கு திடமான மன உறுதியும், நாட்டின் மீதான அன்பும் தேவை. நாட்டின் மீதான அக்கறையை ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை.
பிரதமராக தனக்கு விருப்பமில்லை என்று ராகுல்காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டால் அவருக்கு வேறு வழியில்லை' என்றார்.