ராகுல்காந்தி கோலாருக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபடுவார்; கே.எச்.முனியப்பா சொல்கிறார்


ராகுல்காந்தி கோலாருக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபடுவார்; கே.எச்.முனியப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி கோலாருக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எச்.முனியப்பா கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் கே.எச்.முனியப்பா போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக அவர் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். கோலார் மாவட்டத்திலும், காங்கிரஸ் கட்சியிலும் பலம் வாய்ந்த தலைவராக திகழும் கே.எச்.முனியப்பா, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தோல்விக்கு சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கர்நாடகம் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டபோது ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கே.எச்.முனியப்பாவை அழைத்து சமாதானப்படுத்தினர்.

மேலும் அவரை டெல்லிக்கு அழைத்தும் பேசினர். இதனால் சமாதானம் அடைந்த அவருக்கு தற்போது தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கி உள்ளனர். இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த அவர் தற்போது தீவிரமாக கட்சி பணிகளிலும், பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்,'ஏப்ரல் 5-ந் தேதி முதல் கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் காங்கிரசை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். ராகுல்காந்தி ஒரு தேச தலைவர். அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்பேத்கர் வகுத்த சட்டம் அனைவருக்கும் சமமானது. பா.ஜனதா இந்து, முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. வருகிற 5-ந் தேதி ராகுல்காந்தி கோலாருக்கு வந்து என்னுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்' என்று கூறினார்.


Next Story