ரெயில்வே பணி நியமன ஊழல்; தேஜஸ்வி யாதவ் அமலாக்க துறை விசாரணைக்கு நேரில் ஆஜர்


ரெயில்வே பணி நியமன ஊழல்; தேஜஸ்வி யாதவ் அமலாக்க துறை விசாரணைக்கு நேரில் ஆஜர்
x

டெல்லியில் உள்ள அமலாக்க துறை தலைமையத்தில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் வேலைக்காக நிலம் ஊழல் வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

புதுடெல்லி,

ராஷ்டிரீய ஜனதா தள கட்சித்தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 காலகட்டத்தில் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வேயில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கான பிரதிபலனாக லாலு பிரசாத் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பீகாரின் பாட்னாவை சேர்ந்த பலர், பல்வேறு ரெயில்வே கோட்டங்களில் குரூப் டி பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக, அவர்களது நிலங்கள், லாலு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏ.கே. இன்போசிஸ்டம் என்ற நிறுவனத்தின் பெயர்களில் மாற்றப்பட்டன. பின்னர் அதனை லாலு குடும்ப உறுப்பினர்கள் கையகப்படுத்தினர்.

இதன்படி, பாட்னாவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 292 சதுர அடி நிலங்கள், 5 கிரய பத்திரம், 2 தான பத்திரங்கள் மூலம் லாலு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மாற்றப்பட்டன. அதற்கான பணம், ரொக்கமாக தரப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நிலங்களின் அப்போதைய வழிகாட்டி மதிப்பு ரூ.4 கோடியே 39 லட்சம். ஆனால், சந்தை மதிப்பு அதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.

ரெயில்வேயின் பணி நியமன விதிமுறைகள் பின்பற்றப்படாததுடன், அந்த நபர்கள் நிரந்தரமும் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, இளைய மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சமீபத்தில் லாலு பிரசாத்திடமும், அவரது மனைவி ராப்ரி தேவியிடமும் விசாரணை நடத்தியது. அதேவேளையில் அவர்களின் வீடுகளில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடி பணம், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இந்த மாத தொடக்கத்தில், தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்க துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமலாக்க துறை தலைமையத்தில், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் வேலைக்கு நிலம் வழங்கிய வழக்கின் விசாரணைக்காக இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளின் முன் நேரில் ஆஜரானார்.

இதற்கு முன்பு, தேஜஸ்வி யாதவின் சகோதரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி கடந்த மார்ச் 25-ந்தேதி டெல்லியில் அமலாக்க இயக்கக அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த வழக்கில், டெல்லி, மும்பை, பாட்னா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட 24 இடங்களில் நடந்த அமலாக்க துறையின் சோதனையில், கணக்கில் வராத ரூ.1 கோடி பணம், அமெரிக்க டாலர், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உரிய பிற ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அமலாக்க துறை தெரிவித்து இருந்தது.

இதேபோன்று, ரூ.600 கோடி மதிப்பிலான குற்றங்களை கண்டறிந்து உள்ளோம் என்றும், அவற்றில் ரூ.350 கோடி அசையா சொத்துகளாகவும், பல்வேறு பினாமிக்கள் வழியே ரூ.250 கோடி பணபரிமாற்றம் நடந்துள்ளதும் அடங்கும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.


Next Story