பெண்கள் பாதுகாப்பு குறித்து சொந்த அரசை விமர்சித்த காங்கிரஸ் மந்திரி பதவி நீக்கம்
பெண்கள் பாதுகாப்பு குறித்து சொந்த அரசை விமர்சித்த காங்கிரஸ் மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்,
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, மணிப்பூரில் கலவரத்தின் போது 2 பெண்களை ஒரு தரப்பு ஆண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் சட்டசபையில் இன்று குறைந்தபட்ச வருமான உத்தரவாத சட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மந்திரியான ராஜேந்திர சிங் ஹூடா சொந்த மாநில அரசையே விமர்சித்து பேசினார்.
அவர் கூறுகையில், உண்மை என்னவென்றால் ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அளவு அதிகரிப்பை பார்க்கும்போது மணிப்பூர் விவகாரத்தை எழுப்புவதை விட நமது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஆராய வேண்டும்' என்றார். அவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது/
சொந்த மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாநில அரசு குறித்து சொந்த கட்சி மந்திரியே விமர்சித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜேந்திர சிங் ஹூடா மந்திரி பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் பரிந்துரையின் அடிப்படையில் ராஜேந்திர சிங் ஹூடா மந்திரி பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.