அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீட்டு நடைமுறைக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்


அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீட்டு நடைமுறைக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்
x

அக்னிவீரர்களுக்கு பாதுகாப்பு பணியில் வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஒப்புதல் அளித்து உள்ளார்.



புதுடெல்லி,



முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 14ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். இதனால், வடமாநிலங்களில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.

உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த போராட்டம், வன்முறையாக மாறியுள்ளது. பீகாரில் வன்முறை உச்சம் தொட்டது. ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% இடஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேலும், அக்னிவீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும் என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு பணியில் அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதுபற்றி பாதுகாப்பு மந்திரியின் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு அமைச்சக காலி பணியிடங்களில் அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இந்த 10% இடஒதுக்கீடானது, இந்திய கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்பு நிலைகள் மற்றும் அனைத்து 16 வகையான பாதுகாப்பு பொது துறை பணிகளிலும் அமல்படுத்தப்படும். தற்போது பாதுகாப்பு படையினருக்கு நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டுடன் கூடுதலாக இந்த இடஒதுக்கீடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சேவைகளை அமல்படுத்துவதற்காக, தொடர்புடைய ஆள்சேர்ப்பு விதிகளில் வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் தெரிவித்து உள்ளது. தேவையான வயது தளர்வு பிரிவும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story