தீபாவளி நாளில் பதற வைத்த விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 4 பேர் காயம்
பின்னால் சென்ற வாகனத்தில் இருந்த கேமரா மூலம் விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளன.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கலேனா அக்ரஹாரம் பகுதியில், தீபாவளி நாளான நேற்று அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார், முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி சென்றுவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பின்னால் சென்ற வாகனத்தில் இருந்த கேமராவில் விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளன. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இரண்டு பைக் மீது கார் மோதுவது பதிவாகியிருக்கிறது. ஒரு பைக்கில் பயணித்த நபர், தூக்கி வீசப்பட்டு இரண்டு கார்களுக்கு இடையில் சாலையில் விழுந்தார். மற்றொரு பைக் ஓட்டுநர் நடைபாதையில் விழுந்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போக்குவரத்து மிகுந்த சாலையில் நடந்த இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.