பண்ணை வீட்டில் மது விருந்து: தெலுங்கு நடிகர்- நடிகைகள் பங்கேற்பு - சிக்கிய போதைப்பொருட்கள்


பண்ணை வீட்டில் மது விருந்து: தெலுங்கு நடிகர்- நடிகைகள் பங்கேற்பு - சிக்கிய போதைப்பொருட்கள்
x

நடிகர், நடிகைகள் பங்கேற்ற மதுவிருந்தில் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் சிங்கேன அக்ரஹாராவில் கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் இரவுநேர மது விருந்து நடைபெறுவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

போலீசாரை பார்த்ததும் மதுவிருந்தில் பங்கேற்றவர்கள் பண்ணை வீட்டில் இருந்து ஆங்காங்கே சிறதி ஓடினார்கள். அப்போது பண்ணை வீட்டின் வளாகத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் பாஸ் கொண்ட ஒரு கார் நிற்பதையும் போலீசார் கண்டுபிடித்தார்கள். இன்னும் சிலர் தங்களிடம் இருந்த போதைப்பொருட்களை பண்ணை வீட்டில் உள்ள கழிவறைக்குள் போட்டு அழிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மதுவிருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்த போலீசார், பண்ணை வீட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 15 சொகுசு கார்களிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்த ஐதராபாத்தை சேர்ந்த வாசு என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருவதும் தெரிந்தது.

வாசுவுக்கு பிறந்தநாள் என்பதால், இந்த விருந்திற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் தெலுங்கு சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள், மாடல் அழகிகள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களில் தெலுங்கு சின்னத்திரை நடிகை ஹேமாவும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருந்தில் பங்கேற்ற பலர் மது அருந்தியதுடன், போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போதைப்பொருட்கள் வியாபாரிகள் 3 பேர் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தார்கள். கைதானவர்களிடம் இருந்து 16 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 6 கிராம் கொகைன், 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 2 கார்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விருந்தில் பங்கேற்ற நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பண்ணை வீட்டில் வைத்தே 99 பேரிடம் ரத்த மாதிரி பெறப்பட்டு, அவற்றை பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையில் யாரெல்லாம் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களோ?, அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story