நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வேண்டும் - ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்


நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வேண்டும் - ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Feb 2024 6:23 AM GMT (Updated: 6 Feb 2024 6:39 AM GMT)

தெலுங்கானா உருவாக காரணமாக இருந்த சோனியா காந்தியை மாநில மக்கள் "தாயாக" கருதுகின்றனர் என்று முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். அப்போது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஹம்மம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அவரிடம் வழங்கினார். மேலும், இது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என சோனியா பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனால், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் 17 தொகுதிகளையும் காங்கிரஸ் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாக சோனியா காந்தியிடம் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். மேலும் தெலுங்கானா உருவாக காரணமாக இருந்த சோனியா காந்தியை மாநில மக்கள் "தாயாக" கருதுகின்றனர், இங்கு சோனியா காந்தி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியிடம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்-மந்திரி மல்லு பாட்டி விக்ரமார்கா மற்றும் மாநில வருவாய்த்துறை மந்திரி பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோருடன் சென்ற ரேவந்த் ரெட்டி, தனது அரசு நிறைவேற்றி வரும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார். காங்கிரஸின் ஆறு தேர்தல் உத்தரவாதங்களில், அரசு நடத்தும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் சுகாதார திட்டம் ஆகியவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story