கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது


கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது
x

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய கலபுரகி மாநகராட்சி கமிஷனர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளரும் சிக்கியுள்ளார்.

கலபுரகி:

ரூ.1½ லட்சம் லஞ்சம்

கலபுரகியில் கொரோனா தடுப்பு பணிகளை சரனு என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அதாவது அந்த நிறுவனம் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கை நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மக்களின் சந்தேகத்தை தீர்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்தது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு கலபுரகி மாநகராட்சி சார்பில் ரூ.7½ லட்சம் கொடுக்க வேண்டி இருந்தது.

இதற்கான ஆவணங்களை சரனு, மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து இருந்தார். அந்த ஆவணங்களை பரிசீலனை செய்த மாநகராட்சி கமிஷனர் சங்கர் வங்யால், மாநகராட்சி கணக்காளர் சன்னப்பா ஆகியோர் ரூ.7½ லட்சத்தை விடுவிக்க தங்களுக்கு ரூ.1½ லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளனர். முதலில் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட சரனு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டார்.

கைது

மேலும் சங்கர், சன்னப்பா மீது கலபுரகியில் உள்ள ஊழல் தடுப்பு படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது சரனுவுக்கு சில அறிவுரைகள் வழங்கிய ஊழல் தடுப்பு படையினர் அவரிடம் ரசாயன பவுடர் தடவியரூபாய் நோட்டுகளைகொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை சன்னப்பா வாங்கினார். அப்போது அவரை கையும், களவுமாக ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.

இதுபோல் மாநகராட்சி கமிஷனர் சங்கரும் கைது செய்யப்பட்டார். கைதான 2 பேர் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கைதான மாநகராட்சி கமிஷனர் சங்கர் கே.ஏ.எஸ். மூத்த அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story