குன்னூர் சுற்றுலா பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு


குன்னூர் சுற்றுலா பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 5:29 AM GMT (Updated: 1 Oct 2023 8:37 AM GMT)

குன்னூர் சுற்றுலா பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குன்னூர்,

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ்சில் 61 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள், அங்குள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டு இருந்தது.

மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பஸ், சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், குன்னூரில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story