புறாக்களுக்கு இரை வழங்கினால் ரூ.200 அபராதம்: அறிவிப்பு பலகையால் மக்கள் அதிர்ச்சி


புறாக்களுக்கு இரை வழங்கினால் ரூ.200 அபராதம்: அறிவிப்பு பலகையால் மக்கள் அதிர்ச்சி
x

புறாக்களுக்கு இரை வழங்குவது குற்றமா? என்று கேட்டு பொதுமக்கள் தகராறு செய்து வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு நகரின் இதய பகுதியில் குதிரை பந்தய மைதானம் அமைந்துள்ளது. அந்த சாலைக்கு ரேஸ்கோர்ஸ் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குதிரை பந்தய மைதானத்திற்கு எதிரே உள்ள ரேஸ்கோர்ஸ் சந்திப்பை அழகுப்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள காண்டிராக்டர், தொழிலாளர்கள் மூலமாக கான்கிரீட் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த 6 மாதங்களாக செய்து வருகிறார். ரேஸ்கோர்ஸ் சந்திப்பு பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான புறாக்கள் வருகின்றன.

அவ்வாறு வரும் புறாக்களுக்கு அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், குதிரை பந்தயத்தை காண வருபவர்கள், அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இரை வைத்து வருகின்றனர். சந்திப்பு பகுதிகளில் புறாக்களுக்கு இரைகளை போடுவதுடன், புறாக்கள் குடிக்க தண்ணீரையும் ஊற்றி வைத்துவிட்டு செல்கிறார்கள். இதனால் எந்த நேரமும் நூற்றுக்கணக்கான புறாக்கள் ஒன்று கூடி இரை தின்று வருகின்றன. இதனால் தொழிலாளர்களால் அங்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

புறாக்களால் அந்தப்பகுதியில் கழிவுகள் சேர்வதுடன் அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் தொழிலாளர்களால் வேலை செய்ய முடியவில்லை என்றும் காண்டிராக்டர் கூறியுள்ளார். இதையடுத்து புறாக்களுக்கு இரை, தண்ணீர் வைப்போருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று பெரிய அறிவிப்பு பலகையை ரேஸ்கோர்ஸ் சந்திப்பில் காண்டிராக்டர் வைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலகையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காண்டிராக்டர் மற்றும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுடன் பொதுமக்கள் தகராறும் செய்து வருகின்றனர். புறாக்களுக்கு இரை வழங்குவது குற்றமா?, எந்த துறையிடம் அனுமதி பெற்று ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று பலகை வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு பொதுமக்கள் தகராறு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story