மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது


மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது
x

மங்களூருவில், லாரியில் கடத்த முயன்ற ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு:

போலீசார் சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கீழ்ப்பாடி கெஞ்சனகெரே பகுதியில் லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் கெஞ்சனகெரே பகுதியில் வாகனச்சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் தமிழக பதிவெண் கொண்ட ஒரு காரும், அதன் பின்னால் ஆந்திர பதிவெண் கொண்ட லாரி ஒன்று வந்தது. அந்த கார், லாரியை தடுத்து நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது லாரியின் பின்பகுதியில் செம்மரக்கட்டைகள் இருந்தது.

7 பேர் கைது

இதற்கிடையே ஒருவர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதனால் சுதாரித்த வனத்துறையினர் கார், லாரியில் இருந்த 7 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெட்டிய செம்மரக்கட்டைகளை விற்பனைக்காக கடத்த முயன்றது தெரியவந்தது. ஆனால் எங்கிருந்து எங்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்றனர் என்பது உடனடியாக தெரியவில்லை.

தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் மங்களூருவுக்கு கொண்டு வந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றதா என்பது சந்தேகமாக உள்ளது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் உடுப்பி மாவட்டம் ஆலடியை சேர்ந்த ராஜேஸ் ரெட்டி, அணில் குமார், பால்ராஜ், தினேஷ் குமார், குண்ணி முகமது, மற்றொரு அனில்குமார், சமீர் ஆவார்கள்.

8,308 கிலோ செம்மரக்கட்டைகள்

இதையடுத்து வனத்துறையினர் லாரியுடன் 8,308 கிலோ கொண்ட 316 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4.15 கோடி என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மங்களூரு வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைதான 7 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story